#Aadhaar அட்டையை புதுப்பிக்க செப்டம்பர் 14 கடைசி நாள் என்பது வதந்தி... ஆதார் ஆணையம் விளக்கம்!
ஆதார் அட்டையை புதுப்பிக்க செப்டம்பர் 14 தேதியே கடைசி நாள் என்பது தவறான தகவல் என ஆதார் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் ஆதார் அட்டை என்பது முக்கியமான அடையாள அட்டையாக உள்ளது. வங்கி கணக்கு தொடங்குவது முதல் பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட அரசின் அனைத்து சேவைகளை பெற ஆதார் கார்டு கட்டாயம் ஆகும். ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது ஆதாரை புதுப்பித்து கொள்ள வேண்டும் என்று ஆதார் ஆணையம் அறிவுறுத்துகிறது. அந்தவகையில், சமீபத்தில் ஆதாரை புதுப்பிப்பதற்கான அறிவிப்பு ஒன்று வெளியானது.
ஆதாரை புதுப்பிக்க நாளை மறுநாள் (செப்.14) வரை தான் கால அவகாசம் உள்ளது எனற தகவல் பரவியது. இதனால் இ- சேவை மையம் மற்றும் ஆதார் மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 50 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் தங்கள் ஆதார் அட்டையினை புதுப்பித்துக் கொண்டுள்ளனர். ஆனால் இத்தகவல் உண்மையல்ல, வதந்தி என தற்போது தெரியவந்துள்ளது. இதற்கான உரிய விளக்கத்தை ஆதார் ஆணைய அதிகாரிகள் அளித்துள்ளனர்.
இதுகுறித்து ஆதார் ஆணைய அதிகாரிகள் தெரிவித்ததாவது,
"ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது ஆதாரை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அப்படி புதுப்பிக்காவிட்டாலும் அட்டை செயல்பாட்டில்தான் இருக்கும். சேவைகள் எதுவும் பாதிக்காது. வருகிற 14ம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற தவறான வதந்தியை சிலர் பரப்பியுள்ளனர். இதை பொதுமக்கள் நம்ப வேண்டாம். பொதுமக்களே நேரடியாக ஆதார் இணையதளத்தில் முகவரியை உறுதி செய்யும் ஆவணங்களை பதிவேற்றினால் அதற்கு கட்டணம் கிடையாது. இலவசமாக முகவரி மாற்றத்தைப் பதிவு செய்யலாம்.
இந்த சேவைக்கு செப்டம்பர் 14ம் தேதிக்கு புதுப்பித்தால் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். இதனை பலர் தவறாக புரிந்து கொண்டு, 14ம் தேதிக்குள் ஆதாரை புதுப்பிக்க வேண்டும், இல்லையெனில் ரத்தாகிவிடும் என்று தவறான தகவலை பரப்பி வருகின்றனர். ஆதார் அட்டையைப் புதுப்பிக்க இம்மாதம் 14ம் தேதி கடைசி நாள் என்பது முற்றிலும் தவறான செய்தி. 10 ஆண்டுக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும், ஆதார் அட்டையைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அதற்கு கால அவகாசம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை."
இவ்வாறு ஆதார் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.