சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆனது? - ராஜஸ்தான் அணியிலிருந்து வெளியேற கோரிக்கை!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், அணியிலிருந்து வெளியேற வேண்டும் என நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்தி ஐபிஎல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கு முன் தன்னை 'டிரேட்' செய்ய (வேறு அணிக்கு மாற்றுவது) அல்லது அணியிலிருந்து விடுவிக்க வேண்டும் (release) என சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் தனது முடிவை அணி நிர்வாகத்திடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சாம்சனுக்கு அவர் விரும்பிய பேட்டிங் இடத்தில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டது ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்திய அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கும் அவர், ராஜஸ்தான் அணியிலும் அதே இடத்தில் விளையாட விரும்பியுள்ளார்.
ஆனால், அணி நிர்வாகம் வேறு வீரர்களை தொடக்க வீரர்களாக களமிறக்கியது.ராஜஸ்தான் அணியின் நிர்வாகத்திற்கும், சஞ்சு சாம்சனுக்கும் இடையேயான உறவு முன்பு போல் இல்லை என்றும், இரு தரப்பிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் எம்.எஸ். தோனி விரைவில் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சிஎஸ்கே அணிக்கு ஒரு சிறந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தேவை. சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வர வாய்ப்புள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.
சஞ்சு சாம்சனின் இந்த கோரிக்கை ராஜஸ்தான் அணிக்கு ஒரு சவாலான சூழலை உருவாக்கியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் சாம்சனைத் தக்கவைக்க முயற்சி செய்யுமா அல்லது அவரது கோரிக்கையை ஏற்று வேறு அணிக்கு மாற்றுமா என்பது விரைவில் தெரியவரும். சிஎஸ்கே உள்பட சில அணிகள் சாம்சனை தங்கள் அணிக்கு எடுக்க ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இருப்பினும், ராஜஸ்தான் அணி நிர்வாகம் சாம்சனை தக்கவைத்துக்கொள்ளவே விரும்புகிறது என்றும், அவரை வேறு எந்த அணிக்கும் விற்காது என்றும் சில தகவல்கள் மறுக்கின்றன.
இந்த விவகாரம் குறித்து சஞ்சு சாம்சனோ அல்லது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகமோ அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.