இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை விளக்கம்!
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர் ரகுமான். இவர் கடந்த 1992ம் ஆண்டு வெளியான ‘ரோஜா’ படத்தின் மூலம் சினிமா துறையில் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே முத்திரை பதித்த ஏ.ஆர்.ரகுமானுக்கு அப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும் கிடைத்தது. ரோஜா படத்தின் வெற்றிக்கு பின்னர் தமிழ் திரையுலகம் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என உலகளவில் தன்னுடைய இசையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இன்றளவும் பிசியான இசையமைப்பாளராக வலம் வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் தற்போது தமிழில் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப், ஜெயம் ரவியின் ‘ஜீனி’ உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது. இதுதவிர இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்று (மார்ச் 16) திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
மேலும், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனைக்கு வந்ததாகவும், வழக்கமான பரிசோதனைக்குப் பின் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனை விளக்கமளித்துள்ளது.