"விஜய் என்ன தவறு செய்தார்? அவருக்கு துணையாக நிற்பேன்" - எச். ராஜா பேட்டி
கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தவெக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து இணையவாசிகள் பலரும் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா, விஜய்க்கு ஆதராக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,
"தவெக தலைவர் விஜய் மீது எனக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளது. ஆனால் கரூர் விவகாரத்தில் அவருக்கு துணையாக நிற்பேன். அவர் அப்படி என்ன தவறு செய்தார்? விஜய் 4 மணி நேரம் பிரச்சாரக் கூட்டத்திற்கு தாமதமாக வந்தது ஒரு குற்றமா? எம்ஜிஆர் 36 மணி நேரம் தாமதமாக வந்தாலும் மக்கள் காத்திருந்து பார்ப்பதை நேரில் பார்த்தவன் நான். அது ஒரு குற்றம் என்று சொல்ல முடியுமா? வரும் வழியில் கூட்டம் இருந்திருக்கலாம். அதனால் கூட தாமதம் ஆகியிருக்கலாம்"
இவ்வாறு பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.