என்னது... 544 மக்களவைத் தொகுதிகளா? - தேர்தல் ஆணையத்தின் புதிய விளக்கம்!
மக்களவை தேர்தலில், 543 தொகுதிகள் எனக் குறிப்பிடுவதற்கு பதிலாக 544 தொகுதிகள் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டு அறிவிப்பு வெளியிட்டது. அதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டமாக நடக்க உள்ளது. மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மக்களவைத் தேர்தலில் குறித்த முக்கிய விவரங்களை வெளியிட்டார். 7 கட்டமாக தேர்தல் நடக்க உள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு முடிந்த பிறகு ஜூன் 4-ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், இரண்டு புதிய தேர்தல் ஆணையர்களான ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோருடன் டெல்லியில் மக்களவைத் தேர்தல் அட்டவணையை வெளியிட்டார்.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட அட்டவணையில் 543 மக்களவைத் தொகுதிகளுக்கு பதிலாக ‘544 தொகுதிகள்’ என இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், மணிப்பூர் தொகுதியின் நிலையே தொகுதிகளின் எண்ணிக்கை 544 ஆக அதிகரிக்க காரணம் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடக்கவுள்ள நிலையில், மணிப்பூர் தொகுதிக்கு மட்டும் ஒரு தொகுதிக்கான தேர்தல் இரண்டு நாட்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
மணிப்பூரில் இரண்டு மக்களவை தொகுதிகள் உள்ளன. அவை, மணிப்பூர் புறநகர் மற்றும் மணிப்பூர் நகரம். சமீபகாலமாக மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் தொடர்ந்து நீடித்து வருவதால், பல ஆயிரம் மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலைமையை கருத்தில் கொண்டு மணிப்பூர் புறநகர் தொகுதியில் இரண்டு நாட்கள் தேர்தல் நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.