பாகிஸ்தானில் திடீர் அதிகனமழை: 37 பேர் உயிரிழப்பு!
வட இந்தியா மற்றும் பாகிஸ்தானில் கடும் பனிச்சரிவு மற்றும் கனமழை பெய்தது.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், அப்பகுதிகளில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் கடுமையான பனிப்பொழிவு காரணத்தால், முக்கிய சாலைகள் பனியால் சூழ்ந்துள்ளன. இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : சீர்காழி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று திறந்து வைக்கிறார்!
இதையடுத்து, உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் பகுதிகளில் மின்னலுடன் மழை பெய்தது. மேற்கத்திய இடையூறு காரணமாக வட இந்தியா, இமயமலைப் பகுதிகளில் கடுமையான வானிலை ஏற்பட்டது. மேலும், அண்டை நாடான பாகிஸ்தானில் கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டில் உள்ள பெஷாவர், பலோசிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மழை மற்றும் நிலச்சரிவு தொடர்பான சம்பவங்களில் சிக்கி 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தில் உயிர் சேதம் குறித்த தகவல் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே அடுத்த 24 மணி நேரத்திற்கு பனிச்சரிவு ஏற்படும் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதை தவிர்க்குமாறு காஷ்மீர் நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை வல்லுநர்கள் கூறுகையில்,
"மேற்கத்திய இடையூறு பருவத்தில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிச்சரிவு மிகவும் தீவிரமாக இருக்கும். அதைத் தொடர்ந்து மார்ச் 5 ஆம் தேதி இரவு முதல் மேற்கு இமயமலைப் பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்படும். மேலும், மார்ச் இறுதி வரை இப்பகுதியில் ஈரமான வானிலை இருக்கும்" என தெரிவித்துள்ளனர்.