மேற்கு வங்கம்| வஃக்ப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மற்றொரு மாவட்டத்தில் வெடித்த வன்முறை!
மேற்கு வங்கத்தில் வஃக்ப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர் சமீபத்தில் போராடினர். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கு கலவரத்தைக் கட்டுப்படுத்த மத்திய ஆயுத காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் உள்ள மற்றொரு மாவட்டமான தெற்கு 24 பர்கானாஸிலும் வன்முறை வெடித்துள்ளது. இந்திய மதச்சார்பற்ற முன்னணி (ISF) ஆதரவாளர்கள் வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக ராம்லீலா மைதானத்தை நோக்கிச் பேரணியில் ஈடுபட்டனர். இதில் அக்கட்சி தலைவர் நௌஷாத் சித்திக் கலந்து கொண்டு பேரணியில் இணைந்து சென்றபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் வன்முறை ஏற்பட்டுள்ளது.
காவலர்களுக்கும் அக்கட்சியினருக்கும் ஏற்பட்ட மோதலில் போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன, மேலும் சில போலீசார் காயமடைந்தனர். இதையடுத்து காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டிவரப்பட்டது. இதுகுறித்து காவல்துறை தரப்பு, ராம்லீலா மைதானத்தில் நடந்த பேரணிக்கு முறையான போலீஸ் அனுமதி இல்லாததால், போராட்டக்காரர்களைக் கலைக்க தடியடி நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.