For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மேற்குவங்க ரயில் விபத்து - மீட்பு பணிக்காக பக்ரீத்தை ஒத்தி வைத்த 88 குடும்பத்தினர்!

03:14 PM Jun 19, 2024 IST | Web Editor
மேற்குவங்க ரயில் விபத்து   மீட்பு பணிக்காக பக்ரீத்தை ஒத்தி வைத்த 88 குடும்பத்தினர்
Advertisement

மேற்குவங்க ரயில்விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக 88 முஸ்லீம் குடும்பத்தினர் பக்ரீத் பண்டிகையை கொண்டாடாமல் ஒத்தி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. 

Advertisement

மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி சந்திப்பு ரயில் நிலையம் அருகே கடந்த ஜூன் 17-ம் தேதி காலை 8 மணியளவில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது அதே ரயில் பாதையில் வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது.  இதில் பயணிகள் விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன.

இந்த கோர விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில்,  தற்போது வரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த கோர விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக 88 குடும்பங்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடாமல் இருந்தது தெரிய வந்துள்ளது.

சோட்டா நிர்மல் ஜோட் கிராமத்தில் 88 குடும்பத்தினர் வாழ்கிறார்கள்.  இவர்களில் பெரும்பாலானோர் முஸ்லீம்கள்.  திங்கள்கிழமை காலை, பக்ரீத் பண்டிகையைக் கொண்டாட அனைவரும் தயாராகிக் கொண்டிருந்த போதுதான்,  யாரும் எதிர்பாராத இந்த விபத்து நடந்துள்ளது.

இந்தச் செய்தி அறிந்ததும்,  அந்தக் கிராம மக்கள் அனைவரும் தங்களது கொண்டாட்டத்தை நிறுத்திவிட்டு,  ஒன்றாக சேர்ந்து ரயில் விபத்தில் சிக்கிக் கொண்ட பயணிகளை மீட்கும் பணியில் இறங்கிவிட்டனர்.  மீட்புப் பணிகள் முழுமையாக நடந்து முடிந்த பிறகே அவர்கள் வீடுகளுக்குத் திரும்பினர்.  அவர்களில் 12 இளைஞர்கள் ஒரு குழுவாக இருந்து பலரையும் காக்க போராடியுள்ளனர்.

இதனையடுத்து மறுநாளான நேற்று குர்பானி கொடுத்து பக்ரீத் பண்டிகையை நிறைவு செய்துள்ளனர்.  அனைவரும் மன நிறைவோடு, வெள்ளை நிற ஆடை அணிந்துகொண்டு தங்களது குடும்பத்துடன் பக்ரீத் கொண்டாடியதோடு,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களையும் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்துத் திரும்பியுள்ளனர்.

“ரயில் பெட்டிகளை உடைத்தபோது,  எங்கள் உடல்களிலும் காயங்கள் ஏற்பட்டன.  அவற்றை உடைக்க எங்களிடம் போதிய கருவிகள் இல்லை. எனினும் எப்படியோ பலரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தோம்.  எங்களால் முடிந்ததை நாங்கள் செய்திருக்கிறோம் என்ற மன நிறைவோடு பக்ரீத் கொண்டாடுகிறோம்”  என அன்பின் வெளிப்பாட்டை அந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

மீட்புப் பணிகளுக்கு உதவிய கிராம மக்களை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement