ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதா?
பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா நேற்று(மே.06) நள்ளிரவு பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகம்மது, லஷ்கர்-இ-தொய்பா ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் இந்திய ஏவுகணையால் தகர்க்கப்பட்டன.
இதில் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டு மசூதிகள் சேதம் அடைந்ததாக ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்தது.
தொடர்ந்து இந்தியாவின் தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் வகையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் எல்லைப் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 10 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடந்தப்பட்ட சமயத்தில் இந்தியாவின் ஐந்து போர் விமானங்கள் பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸிடம் கூறியாதாக அந்நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தகவலை இந்தியா இதுவரை உறுதிபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.