"ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்புகிறோம்" - ஒரே பாலின திருமணம் செய்து கொண்ட ஜோடி!
எதிர்காலத்தில் பெற்றோர் இல்லாத ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்புவதாக, ஒரே பாலின திருமணம் செய்து கொண்ட ஜோடி தெரிவித்துளது.
அஞ்சு ஷர்மா மற்றும் கவிதா தப்பு என்ற ஜோடி ஒரே பாலின திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் நான்கு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த பிறகு சமீபத்தில் குர்கானில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தில் அனைத்து சடங்குகளும் செய்யப்பட்டன. இந்த ஜோடி திருமணமாகி இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு செய்தி நிறுவனத்தின் நேர்காணல் ஒன்றில் கலந்துக் கொண்டனர். அதில் அவர்கள் தங்கள் காதல் கதையை பகிர்ந்து கொண்டது மட்டுமல்லாமல், அவர்கள் ஒரு குழந்தையை தத்தெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அந்த நேர்காணலில் அழகு கலை நிபுணரான கவிதா தப்பு பேசும்போது, "எங்கள் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகும் என்பது எனக்கு தெரியும். ஆனால் சிலர் என் குடும்பத்தை பற்றி தவறாக பேசும்போது நான் மிக மோசமாக உணர்ந்தேன். என்னுடைய இந்த முடிவைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். நான் அவளுடன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். எங்களுக்கு திருமணமாகி இரண்டு மாதங்கள் ஆகிறது. நாங்கள் எதிர்காலத்தில் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்புகிறோம். நாங்கள் அதிர்ஷ்டசாலி ஏனென்றால் எங்கள் குடும்பத்தின்ர் எங்களை புரிந்துகொண்டனர்” என்று கூறினார்.
டிவி சீரியல் நடிகையான அஞ்சு சர்மா அவர்கள் இருவரும் எப்படி சந்தித்தனர் என்பதை கூறினார். இதுபற்றி அவர் கூறும்போது, “ஒருமுறை குருகிராமில் எனது படப்பிடிப்பிற்கு எனது மேக்கப் கலைஞராக அவளை வரவழைத்தேன். அவள் என்னுடன் கிட்டத்தட்ட 22 நாட்கள் தங்கினாள். என் அம்மாவுக்கும் அவளைப் பிடிக்கும் அளவுக்கு அவள் நன்றாகப் பழகினாள். கவிதா மிகவும் அக்கறையானர்” என்றார்.
மேலும், அவர் கூறும் போது, “நாங்கள் 4 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். எங்கள் திருமணம் சட்டப்படி செல்லாது. இது வெளிநாடுகளில் சட்டப்பூர்வமானது, ஆனால் இந்தியாவில் இல்லை. திருமணத்திற்கு முன்பு எனது வழக்கறிஞர்களிடம் இதை எப்படிப் பதிவு செய்வது என்று பேசினேன். அதற்கு அவர்கள் அதை பதிவு செய்ய முடியாது, சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவுறுத்தினர். நாங்கள் லிவ்-இன் உறவுச் சான்றிதழைப் பெறலாம். எங்கள் முடிவில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று அவர் கூறினார்.