"உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம்" - #IshaFoundation நிறுவனர் ஜக்கி வாசுதேவ்
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக ஈஷா யோக மைய நிறுவனரான ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.
கோவை ஈஷா மையத்தில் படிக்க சென்ற தங்களது இரு மகள்களை மீட்டுத் தருமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை வடவள்ளியைச் சேர்ந்த காமராஜ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தனது மகள்கள் ஈஷா மையத்தில் யோகா கற்க சென்ற நிலையில், அங்கேயே தங்கி விட்டதாக தெரிவித்தார்.
இந்த வழக்கு கடந்த 9ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோவை ஈஷா யோகா மையம் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்த ஆய்வு செய்து அக்-4 தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோவை மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, ஈஷா யோகா மையத்துக்கு சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், ஈஷா யோகா மையம் தொடர்பான அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என ஈஷா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம் அங்குள்ள வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றிக் கொள்வதாக தெரிவித்தது. மேலும், காவல்துறையினரிடம் உயர்நீதிமன்றம் கேட்டிருந்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படியுங்கள் : “போதைப் பொருள் ஒழிப்பில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது!” – தென் மாநில காவல்துறை இயக்குநர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் #MKStalin உரை!
ஈஷா யோகா மையம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் கோவை எஸ்பி நேற்று (அக்-18ம் தேதி) பதில் மனு தாக்கல் செய்தார். அதில் ஈஷா மையத்தில் எத்தனை பேர் தங்கி உள்ளார்கள், மையத்தில் என்ன நடக்கிறது போன்றவை குறித்த தகவல்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. ஈஷா மையத்தில் தகன மேடை இருக்கும் நிலையில் அங்கு சென்ற பலர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (அக்-19ம் தேதி) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஈஷா விவகாரத்தில் பல வழக்குகள் உள்ளதால், இதனை விசாரிக்க தடை விதிக்க கூடாது என அரசு தரப்பு வாதிட்டது.
இதை ஏற்று நீதிபதிகள் நிலுவையில் உள்ள வழக்குகள் மீதான விசாரணையை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை. மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை அக்டோபர் 21ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பினை வரவேற்பதாக ஈஷா யோக மைய நிறுவனரான ஜக்கி வாசுதேவ் கூறினார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது :
"நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். நீதிமன்றத்தின் கவனம் உண்மையாகவே தேவைப்படும் எண்ணற்ற வழக்குகள் இருக்கும்போது, தவறான நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட அற்பமான மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தனது மதிப்புமிக்க நேரத்தை வீணாக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஜனநாயகத்தின் சிறப்புரிமைகளை இன்னும் பொறுப்புடன் பயன்படுத்த நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது"
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.