“பாஜக கூட்டணிக்கு சமக தலைவர் சரத்குமாரை அன்புடன் வரவேற்கிறோம்” - இணை அமைச்சர் எல்.முருகன்!
சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணியில் இணைந்த நிலையில் “பாஜக கூட்டணிக்கு சரத்குமாரை அன்புடன் வரவேற்கிறோம்” என மத்திய இணை அமைச்சர் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்கபட உள்ளது. தேர்தலையொட்டி கூட்டணி பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று பாஜக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்ததாக சமக தலைவர் சரத்குமார் அறிவித்தார்.
இதையடுத்து பாஜகவிற்கு சரத்குமாரை அன்புடன் வரவேற்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
“பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களை வலுப்படுத்தும் விதமாகவும், மத்தியில் நடைபெற்று வரும் பத்தாண்டு கால நேர்மையான மற்றும் தேச நலன் மிக்க நல்லாட்சி தொடர்ந்திடவும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து பயணிப்பதென்று முடிவு செய்துள்ள, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர், சகோதரர் சரத்குமாரை அன்புடன் வரவேற்கிறோம்!
வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் 400 தொகுதிகளிலும் மற்றும் தமிழ்நாடு,புதுவை 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திர மோடியின் ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ என்ற கனவிற்கு பலம் சேர்க்க, இரு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் இணைந்து செயல்படுவோம்..!” என குறிப்பிட்டுள்ளார்.