பயிற்சியின்போது கழுத்தில் விழுந்த 270 கிலோ எடை... பளுதூக்குதல் வீராங்கனை உயிரிழந்த சோகம்!
ராஜஸ்தான் மாநிலம் பைகானேர் மாவட்டத்தை சேர்ந்தவர் யாஷ்டிகா ஆச்சாரியா (17). பளுதூக்குதல் வீராங்கனையான இவர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார். இந்த நிலையில், யாஷ்டிகா இன்று வழக்கம்போல் ஜிம்மில் பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவருடன் பயிற்சியாளரும் உடனிருந்தார். அப்போது யாஷ்டிகா சுமார் 270 கிலோ எடையை தூக்குவதற்கான பயிற்சியை மேற்கொண்டார்.
அப்போது எதிர்பாராத விதமாக எடை அவரது கழுத்தில் விழுந்தது. இந்த விபத்தில் யாஷ்டிகாவின் கழுத்து எலும்பு முறிந்தது. அவரை காப்பாற்ற முயன்ற பயிற்சியாளருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் யாஷ்டிகாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த யாஷ்டிகாவின் குடும்பத்தினர் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை எனவும், உடற்கூராய்வுக்கு பிறகு யாஷ்டிகாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.