சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்பு, பூங்கொத்துகள் வழங்கி புத்தாண்டை கொண்டாடிய நீலகிரி பழங்குடியின மக்கள்!
நீலகிரியில் பைன் ஃபாரஸ்ட் சூழல் சுற்றுலா தலத்தில் பயணிகளுக்கு மலர் கொடுத்து, இனிப்புகள் வழங்கி பழங்குடியின மக்கள் புத்தாண்டை கொண்டாடினர்.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். இங்குள்ள சுற்றுலா தலங்களை காண அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிகின்றனர்.
இந்நிலையில் இன்று புத்தாண்டு விடுமுறையொட்டி உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பைன் ஃபாரஸ்ட் சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக இப்பகுதியில் நீலகிரி மண்ணின் மைந்தர்களான தோடர் பழங்குடியின மக்கள் சூழல் சுற்றுலாவை செயல்படுத்தி வருகின்றனர்.
இன்று புத்தாண்டை முன்னிட்டு சூழல் சுற்றுலா தலத்திற்கு வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகளுக்கு மலர் கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் புத்தாண்டு வாழ்த்துக்களை பழங்குடியின மக்கள் தெரிவித்தனர்.