மதுரையில் களைகட்டிய புறாச்சந்தை - வெள்ளை எலி தொடங்கி வெளிநாட்டு பறவைகள் வரை அமோக விற்பனை!
மதுரை புறாச்சந்தையில் வெள்ளை எலி தொடங்கி வெளிநாட்டு பறவைகள் வரை விற்பனை அமோகமாக நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
மதுரை சிம்மக்கல் வைகையாற்றின் வடகரை பேச்சியம்மன் படித்துறை பகுதியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை புறாச்சந்தை நடைபெறும். இந்த சந்தையில் வளர்ப்பு பிராணிகள், குருவிகள், மயில் புறா, வெளிநாட்டு பூனை, லவ் பேர்டு, ஆஃப்ரிகன் பேர்டு, சண்டை சேவல், வெள்ளை எலி, முயல்,வாத்து, காடை, வளர்ப்பு வண்ண மீன்கள், நாய் குட்டி, கூண்டுகள், வளர்ப்பு பிராணிகளுக்கான உணவுகள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்படும்.
மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை புறா சந்தைக்கு வருகை தருவார்கள். அந்த வகையில் இன்று (செப். 8) காலை தொடங்கிய புறா சந்தையில் ஏராளமான இளைஞர்கள், சிறுவர்கள் பொதுமக்கள் குவிந்தனர்.
வளர்ப்பு பிராணிகளுக்கான உணவுகள், பிராணிகள், கூண்டுகள் என தங்களுக்கு தேவையானவற்றை ஏராளமான சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். அப்போது இளைஞர்கள் சண்டையிட வைத்து சோதனை அடிப்படையில் சண்டை சேவல்களை வாங்கிசென்றனர். ஒரு புறாவின் விலை 200 ரூபாயில் தொடங்கி, வகை வாரியாக 2 ஆயிரம் ரூபாய் வரைக்கும், சேவலானது ஆயிரம் தொடங்கி 10 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.