பொன்னமராவதி அருகே களைகட்டிய மீன்பிடித் திருவிழா!...ஜிலேபி, கெண்டை மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்!
பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் சித்தார்த்தங் கண்மாயில்
மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் உள்ள
சித்தனத் தங்கண்மாயில் மீன்பிடித்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பொதுவாக
பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில் நீர் வற்றும். அப்போது விவசாய கண்மாய்களில் சாதி, மதம் பாராமல் அனைத்து மக்களும் கலந்து கொள்ளக்கூடிய மீன்பிடித் திருவிழா, நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் ஊர் ஒற்றுமைக்காகவும் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டும் பொன்னமராவதி பகுதிகளில் தினசரி மீன்பிடித் திருவிழா கோலாகலமாக தொடங்கி சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் சித்தார்த்தங் கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் அதிகாலையில் மீன்பிடி உபகரணங்களோடு குவிந்தனர்.
பின்னர் ஊர் முக்கியஸ்தர்களால் நடு மடையில் உள்ள மடை கருப்பரை வழிபாடு செய்த பின்னர் வெள்ளை கொடி காட்டப்பட்டு போட்டி தொடங்கியது. ஒரே நேரத்தில் கிராம மக்கள் போட்டி போட்டுக் கொண்டு கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறைப்படி ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு மீன்பிடிக்கத் தொடங்கினர். அதில் ஒவ்வொருத்தர் கைகளுக்கும் நாட்டு வகை மீன்களான ஜிலேபி, கெண்டை, அயிரை, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன.
குறிப்பாக அரை கிலோ முதல் இரண்டு கிலோ வரை எடை கொண்ட விரால் மீன்கள் கிடைத்தன. அதனை மகிழ்ச்சியுடன் மக்கள் வீட்டிற்க்கு அள்ளிச் சென்றனர்.