Question Paper வடிவில் #WeddingInvitation - அசத்திய ஜோடி!
ஆந்திர மாநிலத்தில் தங்களது திருமண பத்திரிகையை வினாத்தாள் வடிவில் தயாரித்து ஒரு ஜோடி அசத்தியுள்ளது.
திருமணம் என்பது மனிதர்களின் வாழ்வில் இன்றியமையாத ஒன்று. மதம், சாதி, பண்பாடு, கலாசாரம் என மனிதர்களிடையே பல முரண்பாடுகள் இருந்தபோதிலும் திருமணம் எனும் சடங்கு மட்டும் அனைத்து தரப்பிலும் உண்டு. ஆனால் திருமணத்தின் வகைகளும், முறையும் மட்டும் மாறுபடும்.
திருமணம் என்பது நமது இந்தியக் கலாச்சாரத்தில் மிகப்பெரும் கொண்டாட்டமாகவும், ஒரு தவிர்க்க முடியாத சடங்காகவும் பார்க்கப்படுகிறது. திருமணத்திற்கான கொண்டாட்டங்கள் ஒரு திருவிழாவிற்கு நிகராக பெண் அல்லது மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் இருந்து தொடங்குகிறது.
திருமணத்திற்கு பிறரை அழைப்பதற்காக திருமணப் பத்திரிகை அச்சடிப்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த திருமணப் பத்திரிகைகளிலும் பல வகைகள் உண்டு. மிகச் சிறிய அளவிலான விசிட்டிங் கார்ட் அளவிலான திருமண அழைப்பிதழில் தொடங்கி மிகப் பிரம்மாண்டமான திருமண அழைப்பிதழ் வரை பல வகைகளில் அவை அச்சடிக்கப்படுகிறது.
இதேபோல திருமண அழைப்பிதழ்கள் நவீன காலத்திற்கு ஏற்ப புதுப் புது தொழில்நுட்ப வடிவங்களிலும் தயாராகின்றன. சமீபத்தில் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்சப் வடிவிலான திருமணப் பத்திரிகை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதேபோல ஐபோன் தீம் வடிவிலான திருமண பத்திரிகை, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதை பிரசாரம் செய்யும் வகையில் அச்சடிக்கப்பட்ட திருமண பத்திரிகை என வகை வகையான திருமண பத்திரிகைகளை பார்த்திருக்கிறோம்.
அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் ஒரு திருமண ஜோடி தேர்வு வினாத்தாள் வடிவில் திருமண அழைப்பிதழை அச்சடித்து அசத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மார்த்தேரு கிராமத்தில் வசிப்பவர் பிரதியுஷா. இவர் ஒரு ஆசிரியர். இவர் தனது திருமணத்திற்காக வித்தியாசமான முறையில் தேர்வு வினாத்தாள் வடிவில் திருமண அழைப்பிதழை தயார் செய்துள்ளார்.
இந்த அழைப்பிதழில் வினாத்தாளில் இருக்கும் கேள்விகள் போன்றே.. சரியான விடையை எழுதுக, சரியா தவறா?, பொருத்துக போன்ற கேள்விகள் மணமக்கள் மற்றும் திருமணம் சார்ந்த கேள்விகள் இடம்பெற்றுள்ளன. உதாரணத்திற்கு.. திருமண விருந்து 7 மணிக்கு தொடங்கும் சரியா தவறா என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதேபோல அன்பளிப்புகள் வாங்க மாட்டோம் சரியா தவறா என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இந்த திருமண அழைப்பிதழ் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.