#weatherupdates | இந்த மாதத்தில் இயல்பைவிட அதிகமாக மழை பெய்யும் -வானிலை ஆய்வு மையம் தகவல்!
செப்டம்பா் மாதத்தில் இயல்பைவிட அதிகமாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள செய்திக்குறிப்பில்,
”வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று விசாகப்பட்டினத்துக்கு கிழக்கே 120 கி.மீ. தொலைவிலும், கோபால்பூரில் (ஒடிசா) இருந்து தெற்கு- தென்மேற்கு திசையில் 180 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
நாளை மறுநாள் முதல் முதல் 6-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தென் மாநிலங்கள், வடக்கு பிகாா், வடகிழக்கு உத்தர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பான மழைப்பொழிவு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக செய்தியாளா் சந்திப்பில் வானிலை ஆய்வு மைய இயக்குநா் மோஹபத்ரா கூறுகையில், ‘செப்டம்பா் மாதத்தில் நாட்டில் இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும். உத்தரகாண்ட், ஹிமாசல பிரதேசத்தின் சில பகுதிகள், ஜம்மு-காஷ்மீா், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தை ஒட்டிய பகுதிகள் உள்ளிட்ட நாட்டின் வடமேற்கு பகுதியில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது சில பகுதிகளில் வெள்ளத்துக்கு வழிவகுக்கும். நிலச்சரிவுகள் குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
செப்டம்பா் மாதத்தின் அனைத்து வாரமும் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளது. இவை மேற்கு-வடமேற்கு நோக்கி ராஜஸ்தான் வரை பயணிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதால், அப்பகுதியில் பருவமழை இயல்பான நிலையில் இருக்கும்.
ஆகஸ்டில் கூடுதல் 16% மழை: இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் இயல்பை விட 16 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது. நாட்டில் ஆகஸ்ட் மாதம் சராசரியாக 248.1 மி.மீ. மழை பெய்யும் நிலையில், இம்முறை 287.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேசமயம், வடகிழக்கு மாநிலங்கள், கேரளம், மகாராஷ்டிரத்தின் சில பகுதிகளில் மழைப்பொழிவு குறைவாக இருந்துள்ளது.
ஜூன் 1-ஆம் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து இந்தியாவில் வழக்கமான 701 மி.மீ. மழைப்பொழிவைவிட கூடுதலாக 749 மி.மீ. மழை பெய்துள்ளது’ என்றாா்.