#WeatherUpdate | காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தற்போதைய நிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் ஆந்திர கடலோரப் பகுதியை ஒட்டி நிலவி வருகிறது. இது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு தெற்கே 450 கிமீ தொலைவிலும், சென்னைக்கு வடகிழக்கே 370 கிமீ தொலைவிலும் உள்ளது. இதன் காரணமாக வரும் 26-ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவு கணிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையில் பெரும்பாலான இடங்களில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. நேற்று காலை முதல் மழை கொட்டி தீர்த்த நிலையில் பிற்பகலில் வெயில் எட்டி பார்த்தது. இதேபோல், இன்று (டிச.21) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.