#WeatherUpdate – சென்னையில் நேற்றிரவு இடி, மின்னலுடன் கொட்டிய கனமழை!
சென்னையில் புதன்கிழமை மாலை பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
சென்னையில் காற்றின் திசை வேறுபாடு மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில், நேற்று மாலை முதலே பரவலாக மழை பெய்தது. இரவிலும் மழை கொட்டித் தீர்த்தது. இதன்படி, சென்ட்ரல், நுங்கம்பாக்கம், சூளைமேடு, கோடம்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இரவு ஒன்பது மணிக்கு தொடங்கிய மழை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இதனால், வடபழனியில் இருந்து கோயம்பேடு செல்லும் பிரதான சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர்.
வடசென்னையில் திருவொற்றியூர், ராயபுரம், வண்ணாரப்பேட்டை, காசிமேடு, வியாசர்பாடி, திரு.வி.க. நகர், பெரம்பூர், மணலி, எண்ணூர் மற்றும் பல பகுதிகளில் கனமழை பெய்தது. சென்னை புறநகர்ப் பகுதிகளான பூந்தமல்லி, நசரத்பேட்டை, கரையான்சாவடி, மாங்காடு, திருவேற்காடு, அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், வேலப்பன்சாவடி, திருமழிசை, செம்பரம்பாக்கம், குமணன்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
பூந்தமல்லி சாலையில் போரூர் முதல் ராமாபுரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு மழையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.
இந்நிலையில், தமிழகத்தில் ஒருசில இடங்களில் அக்டோபர் 1-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களிலும், அதைத் தொடர்ந்து அக்டோபர் 1-ம் தேதி வரை 4 நாட்களுக்கு ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கடலூர் மாவட்டம் வடகுத்து பகுதியில் 5 செ.மீ., ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம், நீலகிரி மாவட்டம் அழகரை எஸ்டேட், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், தாம்பரம், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், திருவள்ளூர் மாவட்டம் திருவூர், கடலூர் மாவட்டம் வானமாதேவி, குடிதாங்கி, சென்னை கொளத்தூர், மதுரவாயல், வளசரவாக்கத்தில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.