#WeatherUpdate | "தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் வலுவான குறைந்த காற்றழுத் தாழ்வு பகுதி நிலவுகிறது. மேலும், வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஒரு வாரத்திற்கு பரவலாக மழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும்.
நாளை உள்மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும். வரும் 13ம் தேதி டெல்டா மாவட்டங்களிலும், 14ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும். அரபிக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத் தாழ்வு பகுதி அடுத்த 2,3 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் அரபிக்கடல் பகுதியில் மற்றொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது."
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.