#WeatherUpdate | அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுதுதுள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 29ம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘பெஞ்சல்’ எனவும் பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. ஃபெஞ்சல் புயல் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் கரையை கடந்தது.
தொடர்ந்து, புதுச்சேரி அருகே நிலவி வந்த ஃபெஞ்சல் புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. புயல் கரையை கடந்த பிறகும் விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுதுதுள்ளது. அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.