#Weatherupdate | தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
இன்று தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தின் உள் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால், பொதுவாக சில இடங்களில் மழை பெய்துள்ளது. குறிப்பாக வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும் மழை பெய்துள்ளது.
தமிழகத்தின் உள் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் இன்று 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காலை 10 மணி வரை தமிழகத்தில் நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, குமரி, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.