வெளுத்து வாங்கப்போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை...!
சனிக்கிழமை சில மாவட்டங்களுக்கு கனமழைக்கான ‘ஆரஞ்சு’ குறியீடு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கேற்ப சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் சனிக்கிழமை காலை பரவலாக மழை பெய்தது.
லட்சத்தீவு, அதனையொட்டி உள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்மேற்கு வங்கக்கடல், அதனையொட்டி உள்ள பகுதிகளிலும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
இதன் காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மிக கனமழையும் திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், அரியலூர், தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு, திங்கட்கிழமை சென்னையில் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ள வானிலை மையம், கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.