பொருளாதார நடவடிக்கைகளை ஆயுதமயமாக்குவது கவலை அளிக்கிறது - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!
டெல்லியில் இந்தியா-இத்தாலி வணிகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பின் நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று கலந்து கொண்டார். இதில் இத்தாலிய துணைப் பிரதமர் அன்டோனியோ தஜானியும் கலந்து கொண்டார்.
அப்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், "சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல் மிகுந்த சிக்கல் கொண்டதாகவும், கணிக்க முடியாததாகவும் மாறி வருகின்றது. கொரோன நோய்த்தொற்று ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் நடைபெறும் போர்களில் இருந்து மீண்டு வந்தாலும், உலக நாடுகளுக்கு இடையிலான விநியோக முறை மிகவும் பலவீனமாக இருப்பதுடன், கடல்வழி சரக்குப் போக்குவரத்து மிகவும் சீர்குலைந்துள்ளது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
உலக சந்தையில் ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ள பங்கு பயன்படுத்தப்படுவதாலும், பொருளாதார நடவடிக்கைகள் ஆயுதமாக்கப்படுவதாலும் புவிஅரசியல் போட்டி தீவிரமடைந்துள்ளது. வலுவான அரசியல் மற்றும் பொருளாதார கூட்டுறவுகளை கட்டமைத்தல், உற்பத்தி மற்றும் வர்த்தக கூட்டாளிகளை பல்வகைப்படுத்துதல், புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சியில் முதலீடு செய்தல் ஆகியவற்றின் மூலம், தங்களுக்கு ஏற்படக் கூடிய அபாயங்களை உலக நாடுகள் குறைத்து வருகின்றன.
இந்தப் போக்கை இந்தியா-இத்தாலியில் காண முடிகிறது. வரும் ஆண்டுகளில் நிலைத்து நிற்கக்கூடிய, நம்பகமான கூட்டுறவை உருவாக்க ஒத்த சிந்தனையுடைய கூட்டாளி நாடுகளுடன் இந்தியா நெருங்கிப் பணியாற்றி வருகிறது. அந்தப் பட்டியலில் இத்தாலி முன்னணியில் உள்ளது.
2023 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற G20 உச்சிமாநாட்டின் போது IMEC முன்முயற்சி உறுதிப் படுத்தப்பட்டது. ஒரு புதிய பாதையை உருவாக்கும் முயற்சியாகக் கருதப்படும் IMEC, ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் சவுதி அரேபியா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இடையே ஒரு பரந்த சாலை, ரயில் மற்றும் கப்பல் வலையமைப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.