"விரைவில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைவோம்" - முதலமைச்சர் #MKStalin நம்பிக்கை!
விரைவில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைவோம் என சான்பிரான்சிஸ்கோ முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார். சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற அமெரிக்க முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இதுவரை இன்று (30.08.2024) 6 நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இதன் மூலம், சென்னை, மதுரை மற்றும் கோவையில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. இந்நிலையில், சான்பிரான்சிஸ்கோ முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது :
"இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் சுமார் 45% பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நவீன உட்கட்டமைப்பு, திறன்மிகு பணியாளர்களால் உலக முதலீட்டாளர்கள் வெகுவாக ஈர்க்கப்படுகிறார்கள். இந்தியா – அமெரிக்கா இடையேயான பொருளாதார உறவு எழுச்சி கண்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஏராளமான பெருநிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் திட்டங்களை நிறுவி உள்ளன. 300-க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் திட்டத்தினை நிறுவியுள்ளனர்.
இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் செயற்கை நுண்ணறிவு மையம் தொடங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஏராளமான முன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையும் இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறோம்.
இதையும் படியுங்கள் : “சான் பிரான்சிஸ்கோவில் முதல் நாள், அடுத்ததடுத்த நாட்களுக்கான நம்பிக்கைக்குரிய பாதையை அமைத்து தந்துள்ளது!” – முதலமைச்சர் #MKStalin
உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. 39,000 திற்கும் அதிகமான தொழிற்சாலைகள், 2.6 மில்லியன் அளவிற்கு தொழிற்சாலைகளில் பணிபுரியம் தொழிலாளர்கள் என்ற கணக்கில் இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு முக்கியமாக உள்ளது.
மோட்டார் வாகனம், ஜவுளி உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ்கிறது. அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அதிகளவில் முதலீடுகள் செய்ய முன்வர வேண்டும். முதலீட்டாளர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தமிழ்நாடு தயாராக உள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த இந்த மாநாடு உதவும். புதிய அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்"
இவ்வாறு சான்பிரான்சிஸ்கோ முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.