பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றி தூங்க வைக்கும் வரை நாங்கள் தூங்கமாட்டோம்! - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்
பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றி தூங்க வைக்கும் வரை நாங்கள் தூங்கமாட்டோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து, திண்டுக்கல்லில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது :
“கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எங்களை வெற்றி பெற வைத்தீர்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல்லில் ஏமாற்றி விட்டீர்கள். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் மிகப்பெரிய அளவில் மதிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர்தான் சச்சிதானந்தம்.
தேர்தலின்போது மட்டுமே தமிழ்நாட்டுக்கு வருபவர் பிரதமர் மோடி. சில ஆண்டுகளுக்கு முன் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மதுரையில் ஒரு செங்கல் வைத்துவிட்டுச் சென்றார். அதையும் நான் எடுத்து வந்துவிட்டேன். புயல் அடித்தபோதுகூட எட்டிப் பார்க்காத பிரதமர் மோடி, தற்போது தேர்தலுக்காக தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்வையிட்டவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மகளிர் உரிமைத்தொகை, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாணவர்களுக்கு, மாணவிகளுக்கு என தொடர்ந்து பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர்.
இதையும் படியுங்கள் : ஜெயம் ரவியின் ‘ஜீனி’ - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
திண்டுக்கல்லில் ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட நான்கு இடங்களில் புதிய கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் படிக்க ஏற்றவாறு நடவடிக்கை எடுக்கப்படும். ஊத்துக்குளி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரதமர் நரேந்திர மோடி திமுகவிற்கு தூக்கம் தொலைந்துவிட்டதாக கூறினார். உண்மை தான். உங்களையும், பாஜகவையும் ஆட்சியில் இருந்து அகற்றி தூங்க வைக்கும் வரை, நாங்கள் தூங்க மாட்டோம். சென்ற முறையைப் போன்று திண்டுக்கல் தொகுதியில், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். கடந்த முறை 40-க்கு 38. இந்த முறை 40-க்கு 40 என்ற வெற்றியை தர நீங்கள் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.”
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.