”வரி தொடர்பான பிரச்சனைகள் தீரும் வரை இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை இல்லை”- டிரம்ப் திட்டவட்டம்!
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் இந்தியாவின் பொருட்களுக்கு அமெரிக்காவில் 25 சதவீத வரி விதித்தார். மேலும் அவர், ரஷியவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதியை சுட்டிகாட்டி நேற்று மேலும் இந்தியப் பொருட்களின் மீதான வரியை 25 சதவீதம் உயர்த்தினார். இதன் மூலம் இந்தியா மீது விதிக்கப்பட்ட மொத்த வரியானது 50 சதவீதமாக உயர்ந்துள்ளன.
இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, ”விவசாயிகள், மீனவர்கள் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது” என்று மறைமுக பதிலளித்தார். மேலும் இந்திய பிரதமர் மோடி மற்றும் பிரேசில் அதிபர் லுலா டா சில்வா ஆகியோர் தொலைப்பேசியில் வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம் ஆகியவை பற்றி ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஒவல் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் ”புதிய 50% வரி விதிப்பு காரணமாக மீண்டும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா.?” கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த டிரம்ப், ”வரி தொடர்பான பிரச்சனைகள் தீரும் வரை இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்த போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.