For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

01:49 PM Mar 12, 2024 IST | Jeni
தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம்    முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

“நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய இறுதி நாட்களில் மத்திய பாஜக அரசு இருந்து வரும் வேளையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்திட அவசர கதியில் நேற்று அறிவிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல,  பலவகையான மொழி,  இன,  மதம் மற்றும் வாழ்விட சூழல் ஆகியவற்றால் வேறுபட்டிருந்தாலும்,  ஒன்றுபட்ட உணர்வுடன் வாழ்ந்து வரும் இந்திய மக்களின் நலனுக்கும்,  இந்திய தாய்த்திருநாட்டின் பன்முகத் தன்மைக்கும்,  மதச்சார்பற்ற தன்மைக்கும் முற்றிலும் எதிரானதாகும்.  அதுமட்டுமல்ல சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் முகாம்வாழ் தமிழர்களின் நலனுக்கும் எதிரானதுதான் இந்தச் சட்டம்.இதன் காரணமாகத் தான் திமுக அரசு அமைந்தவுடனேயே அதாவது,  கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக,  அரசின் சார்பாக நான் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து, அதனை நிறைவேற்றி இச்சட்டத்தினைத் திரும்பப் பெறவேண்டுமென வலியுறுத்தி மத்திய அரசுக்கு அதனை அனுப்பி வைத்தோம்.  தமிழ்நாட்டைப் போலவே, பல்வேறு மாநிலங்களும் இதனை எதிர்த்து குரல் கொடுத்து வந்துள்ளன.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திலிருந்து தப்பிப்பதற்காக மக்களை திசை திருப்பும் நோக்கத்துடன்,  தேர்தல் அரசியலுக்காக இந்தச் சட்டத்தை தற்போது நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளதோ என கருத வேண்டியிருக்கிறது.

இந்திய மக்களிடையே பேதங்களைத் தோற்றுவிக்க வழிவகை செய்யும் இந்தச் சட்டத்தால் எந்தவிதமான நன்மையோ,  பயனோ இருக்கப்போவதில்லை.  இந்தச் சட்டம் முற்றிலும் தேவையற்ற ஒன்று என்பதுடன்,  ரத்து செய்யப்பட வேண்டியது என்பதுதான் இந்த அரசின் கருத்தாகும்.

எனவே மத்திய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது.  இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது என்பதனை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் இந்த நேரத்தில் உறுதியாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement