”பிற்போக்கு சிந்தனைகளை பள்ளிகளில் நுழைய விடமாட்டோம்"- முதல்வர் ஸ்டாலின் பேச்சு
மத்திய அரசானது தேசிய கல்விக் கொள்கையை கடந்த 2020 ஆண்டு வெளியிட்டது. இந்த கல்விக்கொள்கையில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் தமிழ்நாடு அரசு, இந்த தேசிய கல்விக்கொள்கைக்கு பதிலாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்க முடிவு செய்தது. இதற்காக கடந்த 2022-ம் ஆண்டு பெற்ற 14 பேர் கொண்ட குழுவும் தமிழக அராசால் அமைக்கப்பட்டுள்ளது.
கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் என பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகள் கேட்டறிந்து, இந்த கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. மாநில கல்விக் கொள்கைக்கான அறிக்கை 2024 ஜூலை 1-ம் தேதி தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் பள்ளிக்கல்வித் துறைக்கான ”மாநில கல்விக் கொள்கையை” வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.கஸ்டாலின் ”அரசு பள்ளிகள் வறுமை அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம் என்றார். மாநிலக் கல்வி கொள்கையானது எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான ஆற்றலை வழங்கும் என்றும் இந்த கல்விக்கொள்கையின் படி கல்வியுடன் உடற்பயிற்சியும் இணைக்கப்படும்”என்று தெரிவித்தார்.
மேலும்,”இருமொழி கொள்கைதான் நம் கொள்கை என்று பேசிய ஸ்டாலின் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும் என்றும் உண்டு உறைவிட பள்ளிகள் உருவாக்கப்படும் என்றும் அறிவித்தார். தொடர்ந்து அனைவருக்கும் உயர்கல்வி வழங்கப்படும் என்றும் அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு சிந்தனைகள் பள்ளிகள் நுழைய விடமாட்டோம் என்றும் தெரிவித்தார்.