"ஒரு போதும் மும்மொழியை ஏற்றுக்கொள்ள மாட்டோம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம் !
சென்னை, கொளத்தூர் விநாயகபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கொளத்தூர் கிழக்கு பகுதி செயலாளரும், திமுக ஐ.சி.எப். லேபர் யூனியனின் பொதுச்செயலாளருமான ஐ.சி.எப் முரளிதரன் இல்ல திருமண விழா இன்று நடைப்பெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதோடு திருமண வீட்டார் சார்பாக முதலமைச்சருக்கு வெள்ளி செங்கோல் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமண மேடையில் உரையாற்றினார். அப்போது, "அண்ணா அனைவரையும் தம்பி, தம்பி என்று அழைப்பார். கருணாநிதி அனைவரையும் உடன்பிறப்பே என அழைப்பார். இந்த இயக்கத்தை ஒரு குடும்ப பாச உணர்வோடு உருவாக்கி உள்ளார்கள். இன்றைக்கு பலர் வாரிசு, வாரிசு என்று கூறுகிறார்கள். நமக்கு வாரிசு இருக்கிறது அதனால் வாரிசுகள் என்கிறோம். அதனால் தான் நமது குடும்ப விழாவில் பங்கேற்றுள்ளேன்.
முரளிதரன் படிப்படியாக பணியாற்றி தான் பகுதி செயலாளராக வந்துள்ளார்.16 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார். அவர் உழைப்பிற்கும் விசுவாசத்திற்கும் தான் நான் இங்கு வந்துள்ளேன். திமுக வரலாற்றில் இன்றும் பலர் இணைத்து கொண்டு பணியாற்றி வருகிறார்கள்.
கொளத்தூர் தொகுதியில் நான் சட்டமன்ற உறுப்பினராக நிறுத்தப்பட்ட போது எனக்கு உறுதுணையாக இருந்தவர். அவரிடம் தொகுதி பற்றி கேட்கும்போது நீங்கள் தொகுதிக்கே வர வேண்டாம் நீங்கள் வீட்டிலே இருங்கள், நாங்கள் வெற்றி பெற வைக்கிறோம் என கூறுவார். அவர்கள் தொகுதியில் பணியாற்றுவதன் காரணமாக என் தொகுதியில் நல்ல பெயர் உள்ளது.
மணமக்களின் பெயர்களை பார்க்கும் போது சங்கடமாக உள்ளது. தமிழ் பெயர் இல்லை ஆனால் உங்கள் குழந்தைக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டும். அது தான் அன்பான வேண்டுகோள். தமிழர்கள் என்பதனால் தான் மும்மொழி கொள்கை ஏற்றுக்கொள்ள முடியாது, இரு மொழி கொள்கை தான் எங்களுக்கு வேண்டும் எனக் கேட்கும் ஆற்றல் உள்ளது. 5 ஆயிரம் இல்லை 10 ஆயிரம் இல்லை 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழியை ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதில் கையெழுத்து போட மாட்டோம் என கூறி உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில் முதலமைச்சர் உடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, ஆ.ராசா, அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சென்னை மாநராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.