"முழுமையாக மழை நீர் அகற்றப்படும் வரையில் தொய்வின்றிக் களப்பணியைத் தொடர்ந்திடுவோம்" - முதலமைச்சர் #MKStalin
முழுமையாக மழைநீர் அகற்றப்படும் வரையில் தொய்வின்றிக் களப்பணியைத் தொடர்ந்திடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே நாளை அதிகாலை கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால் திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று (அக். 16) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று முழுவதும் தொடர் கனமழை பெய்த நிலையில், இரவு முதல் மழை படிப்படியாக குறைந்து தற்போது லேசான மழையே பெய்து வருகின்றது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு வடமேற்கு திசையில் கடந்த 6 மணிநேரமாக 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டு வருகின்றது. சென்னையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கு திசையில் 320 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கு-வடகிழக்கு திசையில் 350 கி.மீ. தொலைவிலும், நெல்லூரில் இருந்து தென்கிழக்கே 400 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்த மண்டலம் மையம் கொண்டுள்ளது.
மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரம் கடற்கரையை நோக்கி நகர்ந்து, நாளை (அக்டோபர் 17) புதுச்சேரி மற்றும் நெல்லூர் இடையே சென்னை அருகில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பல இடங்களில் தண்ணீர் தேங்கும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்தது.
இதனால், மக்கள் பலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர். இதன் எதிரொலியாக மக்கள் தங்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை பாலங்களிலும், வீட்டு மாடிகளிலும் நிறுத்தி வைத்தனர். ஆனால், நேற்று முழுவதும் தொடர் கனமழை பெய்த நிலையில், பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கவில்லை. மழை நீர் தேங்கிய சில இடங்களில் அவற்றை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், அவை சரிசெய்யப்பட்டது. மேலும் மழைநீர் தேங்கியுள்ள மத்த இடங்களில் அவற்றை சரிசெய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், முழுமையாக மழைநீர் அகற்றப்படும் வரையில் தொய்வின்றிக் களப்பணியைத் தொடர்ந்திடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"கனமழை குறித்த ‘அலெர்ட்’ பெறப்பட்டவுடன் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, பொதுமக்களின் ஒத்துழைப்போடு எதிர்கொண்டோம். பெரும்பாலான இடங்களின் மழைநீர் தேங்காமல் சரிசெய்யப்பட்டுள்ளது. முழுமையாக மழைநீர் அகற்றப்படும் வரையில் தொய்வின்றிக் களப்பணியைத் தொடர்ந்திடுவோம்!"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தெரிவித்துள்ளார்.