"2026ல் திமுக அரசை மாற்றுவோம்" - தவெக தலைவர் விஜய் உறுதி !
சர்வதேச மகளிர் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மகளிர் தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,
"எல்லோருக்கும் வணக்கம் இன்று மகளிர் தினம், தமிழ்நாடு முழுவதும் உள்ள என்னுடைய அம்மா, அக்கா, தங்கை, தோழி என அனைவருக்கும் இந்த தினத்தில் வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியாது. உங்கள் அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துகள். சந்தோஷம்தானே. பாதுகாப்பாக இருந்தால்தானே சந்தோஷத்தை உணரமுடியும். அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாதபோது. எந்த சந்தோஷமும் இருக்காதுதானே? அப்படியென்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. என்ன செய்ய?
நீங்கள், நாம் எல்லோரும் சேர்ந்துதான் இந்த திமுக அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனால் அவர்கள் நம்மை இப்படி ஏமாற்றுவார்கள் என்று இப்போதுதானே தெரிகிறது. எல்லாமே இங்கு மாறக்கூடியதுதானே? மாற்றத்திற்கு உரியதுதானே? கவலைப்படாதீர்கள். 2026ல் நீங்கள் எல்லோரும் சேர்ந்து இல்லை நாம் எல்லோரும் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுக அரசை மாற்றுவோம்.
— TVK Vijay (@TVKVijayHQ) March 8, 2025
அதற்கு மகளிர் தினமான இன்று நாம் எல்லோரும் சேர்ந்து உறுதியேற்போம். ஒன்றுமட்டும் கூறிக்கொள்கிறேன். எல்லா சூழ்நிலையிலும் உங்களுடைய ஒரு மகனாக, அண்ணனாக, தம்பியாக. தோழனாக உங்களுடன் நான் நிற்பேன். நன்றி வணக்கம்". இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.