மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்| வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கருத்து!
இஸ்ரேல் பதிலளிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம், ஆனால் எந்தவொரு நாடும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
காஸா, லெபனானில் உள்ள ஹமாஸ், ஹிஸ்புல்லாக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரான் பதில் தாக்குதலில் நேற்று (02.10.2024) இரவு ஈடுபட்டது. இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்ட நெதன்யாகு செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது, ஈரான் மிகப் பெரிய தவறு செய்துவிட்டதாகவும், அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டும் என்றும் தெரிவித்தார். இதனால் மேற்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் தீவிரம் அடைந்துள்ளது.
இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் அமெரிக்காவில் உள்ள சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோமென்ட் மையத்தில் மேற்கு ஆசிய பகுதியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் குறித்து பேசினார். அப்போது ஹமாஸ் போராளிகளால் இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு நடத்தப்பட்ட அக்டோபர் 7 தாக்குதலை "பயங்கரவாத தாக்குதலாக" கருதும் இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார். மேலும் இது மத்திய கிழக்கு பகுதியின் தற்போதைய பதட்டங்களுக்கு மூல காரணம் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இஸ்ரேல் பதிலளிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம், ஆனால் எந்தவொரு நாடும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை கருத்தில் கொள்ள வேண்டும், அது பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் சேதம் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று எஸ் ஜெய்சங்கர் அழைப்பு விடுத்தார்.
காசா பகுதியில் ஒரு சர்வதேச மனிதாபிமான முயற்சிக்காக. இஸ்ரேல்-ஹமாஸ்-லெபனான் மற்றும் ஈரான் இடையே தற்போது நிலவும் பதட்டங்கள் மட்டுமின்றி மேற்கு ஆசியாவில் பல்வேறு வகையான மோதல்கள் குறித்தும் இந்தியா அக்கறை கொண்டுள்ளது என்றும் ஜெய்சங்கர் கூறியுள்ளார். கடினமான காலங்களில் அனைத்து தரப்பினருக்கும் இடையே தொடர்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தை இந்தியா உணர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.