“புரிந்து கொண்டு பேச வேண்டும்” - கும்பமேளா உயிரிழப்பு பற்றிய ஹேம மாலினியின் கருத்துக்கு சமாஜ்வாதி எம்பி டிம்பிள் யாதவ் விமர்சனம்!
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வு நடைபெற்று வருகிறது. கடந்த 14ஆம் தேதி தொடங்கிய கும்பமேளா பிப்ரவரி மாதம் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த ஆன்மிக நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலிருந்தும் கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு, புனித நீராடி வருகின்றனர்.
இந்த கும்பமேளா நிகழ்ச்சியில் மவுனி அம்மாவாசை அன்று(ஜன.29) அதிகாலை ஏராளமான பக்தர்கள் புனித நீராட குவிந்ததால் கூட்ட நெரில் ஏற்பட்டு 30 பேர் உயிரிழந்தனர். மேலும் இதில் 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவ்விவகாரம் தொடர்பாக பாஜக எம்பி ஹேம மாலினி, "கும்பமேளா கூட்ட நெரிசலில் மக்கள் இறந்தது, அவ்வளவு பெரிய சம்பவம் ஒன்றும் இல்லை. அந்த விவகாரம் மிகைப்படுத்தப்படுகிறது. நான் அங்கு சென்று நன்றாக நீராடினேன். எல்லா ஏற்பாடுகளும் சிறப்பாக இருந்தன. ஏராளமான மக்கள் வரும் போது, கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படும்” என பேசியிருந்தார்.
இந்த நிலையில் ஹேம மாலினியின் கருத்துக்கு சமாஜ்வாதி எம்பி டிம்பிள் யாதவ் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “ அவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்தால், மக்களின் வலியையும், விரக்தியையும் பார்த்து புரிந்து கொண்டு பேச வேண்டும்”
இவ்வாறு சமாஜ்வாதி எம்பி டிம்பிள் யாதவ் தெரிவித்துள்ளார்.