“ஒரே வாரத்தில் வெளுத்த ஒலிம்பிக் பதக்கம்” - US வீரரின் அதிர்ச்சிப் பதிவு!!
பதக்கம் தரமானதாக இல்லை என்று அமெரிக்க வீரர் நைஜா ஹூஸ்டன் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் 33வது ஒலிம்பிக் தொடர் கடந்த 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பல வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு போட்டிகளில் சாதனை படைத்து வருகின்றனர். இந்த தொடர் நாளையுடன் முடிவடைகிறது. இதனிடையே போட்டிகளுக்கு மத்தியில் பல சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் ஸ்கேட் போர்டு விளையாட்டில் வெண்கலம் வென்ற அமெரிக்காவைச் சேர்ந்த நைஜா ஹூஸ்டன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பதக்கம் தரமற்று, அதன் பொலிவையும், வண்ணத்தையும் இழந்துவிட்டது” எனக் கூறியுள்ளார். ஒலிம்பிக் பதக்கங்கள் என்றாலே பார்ப்பதற்கே அழகாக, தரமாக இருக்கும். புத்தம் புதியதாக அனைவரையும் கவரும் வண்ணத்தில் காணப்படும். ஆனால் இம்முறை அளிக்கப்பட்ட பதக்கத்தில் தரம் குறைவு. கைகளில் வைத்திருந்த போது வியர்வையால் நனைந்து வெண்கலப் பூச்சு உதிர்ந்து, அதன் நிறம் மாற ஆரம்பித்துவிட்டது.
நாம் எதிர்பார்க்கும் தரம் இந்த பதக்கத்தில் இல்லை என்று கூறியுள்ளார். இதேபோல், பிரிட்டனுக்கான முதல் பதக்கத்தை பெற்றுத் தந்த நீச்சல் வீராங்கனையுமான ஸ்கார்லெட் மெவ் ஜென்சன் இதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இருப்பினும், பதக்கம் தரமற்றவையாக இருந்தாலும் அதை பற்றி கவலையில்லை, எப்படி இருந்தாலும் அது ஒரு பதக்கமே என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது பேசு பொருளாகியுள்ளது.