For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"திருநங்கையர்கள், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவருக்கு தனிக் கொள்கை அவசியம்" - முதலமைச்சருக்கு சவுமியா அன்புமணி கடிதம்!

திருநங்கையர்கள் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமைகளுக்காக ஒருங்கிணைந்த கொள்கைகளை வகுக்க கூடாது என்று பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
12:04 PM Feb 12, 2025 IST | Web Editor
 திருநங்கையர்கள்  திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவருக்கு தனிக் கொள்கை அவசியம்    முதலமைச்சருக்கு சவுமியா அன்புமணி கடிதம்
Advertisement

தமிழ்நாட்டில் திருநங்கையர், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவர், தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஆகியோருக்கான சமூகநீதி உள்ளிட்ட உரிமைகளை உறுதி செய்வதற்கான கொள்கைகளை வகுக்கும் போது அவற்றை ஒருங்கிணைந்து வகுக்காமல் தனித்தனியாக வகுக்க வேண்டும் என்று பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

"திருநங்கையர், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவர் (Transgender Persons), தன்பாலின ஈர்ப்பாளர்கள் (LGBTQ) ஆகியோருக்கான சமூகநீதி உள்ளிட்ட உரிமைகளை உறுதி செய்வதற்கான கொள்கைகளை வகுக்கும் போது அவற்றை ஒருங்கிணைந்து வகுக்காமல் தனித்தனியாக வகுக்கக் கோருதல் தொடர்பாக
தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் ஒதுக்கப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும், அவமதிக்கப்பட்டும் வரும் திருநங்கையர், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவரின் சிக்கல்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்குடனும், அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கோரவும் முதலமைச்சராகிய தங்களுக்கு, அவர்களின் பிரச்னைகளை அறிந்தவர் என்ற முறையில் இக்கடிதத்தை நான் எழுதுகிறேன்.

மாற்றுத்திறனாளிகள் எவ்வாறு கடவுளின் குழந்தைகள் என்று கொண்டாடப் படுகிறார்களோ, அதே போல் தான், பிறப்பிலேயே இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட திருநங்கையர், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவரும் அரசாலும், சமூகத்தாலும் அரவணைக்கப்பட்டிருக்க வேண்டும்; கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது நடக்காதது மட்டுமின்றி, அவர்கள் தீண்டத்தகாதவர்களையும் விட மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள்; பொதுவெளியில் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த அநீதிக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் பல பத்தாண்டுகளாக நடத்தப்பட்டு வரும் பரப்புரைகளின் காரணமாக அவர்களும் நம்மில் ஒருவர் தான் என்ற எண்ணம் இப்போது உருவாகத் தொடங்கியிருக்கிறது. ஆனாலும், அவர்கள் கண்ணியத்துடனும், கவுரவத்துடனும், சக மனிதர்களுக்கு உரிய அனைத்து மரியாதைகள் மற்றும் உரிமைகளுடன் வாழ இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டும்.

திருநங்கையர்கள், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவருக்கு உரிமை வழங்குவதற்காக மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக மத்திய அரசால், 2019ஆம் ஆண்டு திருநங்கையர்கள், திருநம்பியர்மற்றும் இடைபாலினத்தவர் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் இயற்றப்பட்டு, அதற்கான விதிகள் 2020ஆம் ஆண்டு வகுக்கப்பட்டன.

அதனடிப்படையில் திருநங்கையர்கள், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவரின் உரிமைகளைக் காக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அவர்களுக்கு இட ஒதுக்கீட்டுடன் கூடிய தனிக்கொள்கையை உருவாக்க வேண்டும் என்று கோரி கடந்த 2021ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் நாள் விசாரித்த உயர்நீதிமன்ற நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன் திருநங்கையர்கள், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவருக்கு தனிக் கொள்கை வகுக்கலாம் என்று தமிழ்நாடு அரசுக்கு ஆணையிட்டார்.

அதனடிப்படையில் தமிழ்நாடு அரசும் தனிக் கொள்கையை வகுத்து வருகிறது. அந்தக் கொள்கை அரசிதழில் வெளியிடப்படுவதற்கு மொத்தம் 9 நிலைகளைக் கடக்க வேண்டிய சூழலில், இப்போது எட்டாவது கட்டத்தில் இருப்பதாகவும், இதைக் கடந்து அமைச்சரவையின் ஒப்புதலை பெற வேண்டும் என்றும் கடந்த 3ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்த தமிழக அரசின் வழக்கறிஞர், கொள்கையை உறுதி செய்ய 3 மாதம் கூடுதல் கெடு வழங்கக் கோரினார்.

இந்த விவகாரத்தில் இதுவரை எந்தச் சிக்கலும் இல்லை. திருநங்கையர்களைக் போலவே தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கும் தனிக்கொள்கை வகுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், தங்களுக்கு தனிக் கொள்கை தேவையில்லை என்றும், இரு தரப்பினருக்கும் சேர்த்து ஒருங்கிணைந்த கொள்கை வகுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். அதை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன் கடந்த 3ஆம் தேதி இது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, திருநங்கையர்கள், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவருக்கும், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கும் தனித்தனியாக கொள்கைகள் வகுப்பதால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும்; அதனால் இருவருக்கும் ஒருங்கிணைந்த கொள்கை வகுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது குறித்த அரசின் நிலைப்பாட்டை வரும் 17ஆம் தேதி விளக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளார்.

திருநங்கையர்கள், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவருக்கும், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கும் ஒருங்கிணைந்த கொள்கை வகுக்கப்பட்டால், திருநங்கையர்கள், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். திருநங்கையர்கள், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவருக்கான கொள்கையில் மிக முக்கியமான ஒன்று அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான அனைத்து வகுப்பு இட ஒதுக்கீட்டிலும் ஒரு விழுக்காடு கிடைமட்ட இட ஒதுக்கீடு (Horizontal Reservation) வழங்குவது தான். சென்னை உயர்நீதிமன்றமும் இதை பல்வேறு தீர்ப்புகளில் உறுதி செய்திருக்கிறது. இட ஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளைப் பெருவதில் திருநங்கையர்கள், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவரையும், தன்பாலின ஈர்ப்பாளர்களையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது. இரு பிரிவினரின் சமூக, கல்வி நிலைகளும் முற்றிலும் நேர் எதிரானவை என்பதால் இருவருக்கும் ஒரே கொள்கை வகுப்பது சமூக நீதி ஆகாது.

திருநங்கையர்கள், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவர் சமூகப் புறக்கணிப்புகளையும், அவமதிப்புகளையும் எதிர்கொள்கின்றனர். கல்வி நிறுவனங்களில் கல்வி மறுக்கப்படுகிறது. வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. அவர்கள் பிறப்பின் அடிப்படையில் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். அவர்கள் அடையாளங்களைக் கொண்டு அவமதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான தருணங்களில் குடும்பத்தினர் கூட அரவணைப்பதில்லை. திருநங்கையர்கள், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவர் என்ற நிலை அவர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் கிடைப்பதில்லை. அவர்களால் சமூகத்துடன் இரண்டறக் கலந்து வாழ முடியாது. சமூகத்தின் அங்கீகாரத்தை பெறும் அவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை.

இந்த சிக்கல்கள் எதுவும் தன்பாலினச் சேர்க்கையாளர்களுக்கு கிடையாது. அவர்கள் பிறப்பின் அடிப்படையில் புறக்கணிக்கப்படுவது கிடையாது. அவர்களுக்கு கல்வியும், வேலைவாய்ப்பும் மறுக்கப் படுவதில்லை. தன்பாலின ஈர்ப்பாளர்களாக இருப்பவர்கள் அடையாளத்தை மறைத்துக் கொண்டு சமூகத்தில் அந்தஸ்துடன் வாழ முடியும். தன்பாலின ஈர்ப்பாளர் என்பது அவர்களாகவே விரும்பி ஏற்றுக் கொண்ட நிலை ஆகும். எனவே, இரு தரப்பினரையும் ஒப்பிட்டுப் பார்ப்பதே தவறானது ஆகும்.

திருநங்கையர்கள், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவரின் சமூக அங்கீகாரத்திற்கும், வளர்ச்சிக்கும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னேறுவதற்கும் அவர்களுக்கென்று தனிக் கொள்கை தேவை. இதை உணர்ந்து திருநங்கையர்கள், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவருக்கு தனிக் கொள்கை வகுக்கும் முடிவில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும். தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டை வரும் 17ஆம் தேதி இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும் போது உறுதிபட தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement