"வாரம் 70 மணி நேரம் வேலை செய்யும் கலாச்சாரத்தை ஏற்க வேண்டும்" - மனீஷ் திவாரி எம்.பி
வாரத்திற்கு 70 மணி நேரம் பணிபுரிய வேண்டும் எனும் கருத்திற்கு காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனீஷ் திவாரி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி, பொருளாதாரத்தை முன்னேற்ற இந்தியர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அவரது கருத்தானது சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. அதே சமயம் குறைகள் மட்டுமே சொல்லிக் கொண்டு இருக்காமல், அழுத்தங்களை ஏற்று சூழ்நிலைகளுக்கு ஏற்ப சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆதரவு கருத்துகளும் எழுந்தன.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனீஷ் திவாரி, இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் கருத்துக்கு ஆதரவாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது : "நாராயணமூர்த்தியின் கருத்துக்கு ஏன் இத்தனை எதிர்குரல்கள் என எனக்கு புரியவில்லை. இதில் என்ன தவறு உள்ளது. என்னைப் போன்ற அரசியல்வாதிகள் வாரத்தின் 7 நாட்களும் மக்களுக்கான பணியில் உள்ளோம். நாள் ஒன்றுக்கு 12 முதல் 15 மணி நேரங்கள் வேலை செய்கிறோம். நான் கடைசியாக எந்த ஞாயிற்றுக்கிழமை விடுப்பு எடுத்தேன் என எனக்கு நினைவில்லை. ஞாயிறும் எங்களுக்கு முழு வேலை நாள் தான். பதவியில் இருந்தாலும் இல்லையென்றாலும் இது தான் எங்களுடைய நிலை.
பொருளாதாரத்தில் இந்தியா வலுவான நாடாக மாற வாரம் 70 மணி நேரம் வேலை செய்யும் கலாச்சாரத்தை ஏற்க வேண்டும். 70 மணி நேர வேலை, வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை மற்றும் ஆண்டுக்கு ஒரு முறை சுற்றுலா என்பதை நாம் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்"
இவ்வாறு அவர் தன் X தளத்தின் பதிவில் தெரிவித்துள்ளார்.