“மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறை வேண்டும்” - பிரதமர் மோடி வலியுறுத்தல்!
அண்டை நாடான இலங்கையில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அந்த வகையில், இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகாவை இன்று (ஏப்.5) பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, இந்தியா – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு மதிப்புமிக்க மித்ர விபூஷணா விருதை வழங்கி இலங்கை அதிபர் கெளரவித்தார்.
பின்பு இருவரும் இணைந்து சம்பூர் சூரிய மின்சக்தி திட்டத்தை இணையவழியாக தொடங்கி வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் துறைகளில் இன்று பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அவர்கள் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பிரதமர் மோடி பேசுகையில், “இலங்கையில் 13வது அரசியல் சட்ட திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும், தமிழர்களின் விருப்பம் கவனத்தில் கொள்ளப்படும் என நம்புகிறோம். மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் பேசினோம். மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் நாம் முன்னேற வேண்டும். இலங்கை வசம் உள்ள படகுகள், மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தினோம்”
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.