“பாகிஸ்தான் மக்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்” - விஜய் ஆண்டனி அறிக்கை!
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்.22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்திய மத்திய அரசு பாகிஸ்தான் மீது சில நடவடிக்கைகளை எடுத்து. குறிப்பாக சிந்து நதி ஒப்பந்தத்தை தன்னிச்சையாக ரத்து செய்வதாக அறிவித்தது. இதையடுத்து பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக, சிம்லா ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட முக்கிய பல நடவடிக்கைகளை எடுத்தது. மேலும் இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு நடுநிலையான விசாரணை கோரியது.
தொடர்ந்து சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து பாகிஸ்தான் மக்களுக்கு ஆதரவாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று(ஏப்.27) அறிக்கை வெளியிட்டார். அதில், இந்திய மக்களைக் கொன்றது பயரங்கவாதிகள்தானே தவிர, பாகிஸ்தானைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் இல்லை என்றும் ,30 கோடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் சிந்து நதியைத் தடுத்து நிறுத்தும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டு என்றும் வலியுறுத்தினார்.
— vijayantony (@vijayantony) April 27, 2025
இந்த நிலையில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டணி பாகிஸ்தான் மற்றும் அங்கு வசிக்கும் இந்திய மக்களுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.
அதே சமயத்தில் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொது மக்களையும், நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
அவர்களும், நம்மைப் போல அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள். வெறுப்பைக் கடந்து மனிதத்தை வளர்ப்போம்”
இவ்வாறு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.