“இடையூறு செய்து கட்சியை உடைக்க நினைத்தவர்களை வெளியேற்றினோம்” - #AIADMK துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேட்டி!
அதிமுகவிற்கு இடையூறு செய்து கட்சியை உடைக்க வேண்டும் என நீதிமன்றம் சென்றவர்கள் மற்றும் கட்சிக்கு களங்கம் விளைவித்தவர்களை அடையாளம் கண்டறிந்து வெளியேற்றி இருப்பதாக அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“திருமாவளவன் மற்றும் வேல்முருகன் இருவரும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்காக போராடி தலைமை பொறுப்புக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் எந்த கட்சியில் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. நாங்கள் வேண்டிக் கொள்வது அவர்கள் இருக்கின்ற கட்சிக்காக மட்டும் குரல் கொடுக்காமல், அந்த சமுதாயத்திற்காக மேலும் குரல் கொடுக்க வேண்டும் என்றால் அவர்கள் ஒற்றுமையாக இருந்து போராட வேண்டும்.
அதிமுகவில் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்ற கருத்தை ஊடகங்கள் தான் கூறி வருகிறது. சில அரசியல் விமர்சகர்கள் சுயநலம் கருதி அந்த கருத்தை கூறியிருக்கிறார்கள். அதிமுகவிற்கு இடையூறு செய்து கட்சியை உடைக்க வேண்டும் என நீதிமன்றம் மற்றும் காவல் நிலையம் சென்றவர்கள் மற்றும் கட்சிக்கு களங்கம் விளைவித்தவர்களை அடையாளம் கண்டறிந்து வெளியேற்றி இருக்கிறோம். வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வீர்களா என்று வேண்டுமானால் ஊடகங்கள் கேட்கலாம்? தவறு இழைத்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பது அதிமுகவின் சட்ட விதிகளில் இல்லை.
முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்திலிருந்து தவறு செய்தவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு பின் அவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதை பொதுச் செயலாளர் முடிவெடுத்து விருப்பப்பட்டால் சேர்க்கலாம். மீண்டும் அவர்கள் தவறு செய்வார்கள் என தோன்றினால் சேர்க்காமல் போகலாம். அது பொதுச்செயலாளரின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது. யார் மன்னிப்பு கடிதம் கொடுத்து கட்சியில் சேர முன் வருகிறார்கள் என்று அவருடைய பெயரைக் கூறினால் நாங்கள் பரிசீலிக்கிறோம்.
முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் சசிகலா இருவரும் முயற்சியும், அனுபவமும் இல்லாதவர்கள் அல்ல. அவர்கள் சுயநலத்துடன் கருத்துக்கள் சொல்வதை தவிர்த்து கட்சியின் நலன் கருதி கருத்துகளை சொல்வார்கள் என்றால் அப்பொழுது அந்த கருத்துக்களின் அடிப்படையில் நாங்கள் என்ன கூற வேண்டும் என்பதை கூறுவோம். கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு டாடா, டெல்டா, ஓலா, மைலான் போன்ற கம்பெனிகளை கொண்டு வந்தார்
ஸ்டாலின் முதலமைச்சரான 4 ஆண்டு காலத்தில் அவரும் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தினார். வெளிநாடு சென்றார். ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு என்ன தொழிற்சாலை கொண்டுவந்துள்ளார்கள்? காங்கிரஸ் ஆட்சிக்குப் பின்பு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் தான் குடிமராமத்து பணி மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது வண்டல் மண் எடுக்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் வண்டல் மண் முழுவதும் பிளாட் போட்டு விற்பவர்களுக்கு விலைக்கு விற்று கொண்டிருக்கிறார்கள். வாக்கு வங்கிக்காக மட்டும் அரசாங்க பணத்தை பயன்படுத்தும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார்”
இவ்வாறு கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.