‘ஈரான் அதிபர் இறப்பிற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை’ - இஸ்ரேல் அறிவிப்பு!
ஈரான் அதிபர் கொல்லப்பட்டதற்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என இஸ்ரேல் அரசு அதிகாரிகள் சர்வதேச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
மேற்காசிய நாடான ஈரானின் அதிபர் இப்ராஹிம் ரைசி, அஜர்பைஜான் நாட்டின் ஹராஸ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை திறக்கும் நிகழ்ச்சிக்காக நேற்று ஹெலிகாப்டரில் சென்றார். அந்நாட்டு பயணத்தை முடித்துவிட்டு இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் மூலம் ஈரான் திரும்பிக்கொண்டிருந்தார்.
அவருடன் ஈரான் வெளியுறவு அமைச்சா் ஹொசைன் அமிரப்டோலாஹியன், மாகாண ஆளுநா் மற்றும் அதிகாரிகளும் உடன் பயணித்தனர். அப்போது, அசர்பைஜானை ஒட்டியுள்ள ஈரானின் ஜல்பா நகரில் அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்தார். வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் பயணம் மேற்கொண்ட பல அதிகாரிகள் உயிரிழந்தனர்.
இச்செய்தி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரில் இஸ்ரேலுக்கு எதிராக லெபனான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா அமைப்பை ஈரான் ஆதரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்குமோ என உலகம் முழுவதும் அச்சம் நிலவியது.
இந்த சூழலில் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அரசு ஊடகங்களில் வரும் செய்திகளில் விபத்து என்று குறிப்பிடப்பட்டாலும், ஈரான் அரசு சார்பாக யாரும் விபத்து என்பதை உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் இந்த விபத்திற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என இஸ்ரேல் அதிகாரிகள் ஊடகங்களின் மூலம் தெரிவித்துள்ளனர். மேலும் இப்ராஹிம் ரைசி இறப்பு குறித்து அமெரிக்காவும் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.