For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“இந்திய அணியை புறக்கணிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை” - தேசியக்கொடி தொடர்பான சர்ச்சைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம்!

சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் நடத்தப்படும் மைதானத்தில் இந்தியாவின் கொடி ஏற்றப்படாததற்கான காரணத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
08:39 PM Feb 17, 2025 IST | Web Editor
“இந்திய அணியை புறக்கணிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை”   தேசியக்கொடி தொடர்பான சர்ச்சைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம்
Advertisement

2025 சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் இத்தொடரில் 8 அணிகள் விளையாடவுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி, குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காள தேசம் ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் லீக் சுற்றில் விளையாடவுள்ளன.

சாம்பியன்ஸ் டிராபி தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில், போட்டிகள் நடத்தப்படும் பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியாவின் தேசியக் கொடி ஏற்றப்படாதது பெரும் பேசுபொருளாகியுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட முடியாது என இந்திய அணி ஏற்கனவே உறுதிபட தெரிவித்துவிட்டது. அதனால், இந்திய அணிக்கான அனைத்துப் போட்டிகளும் துபாயில்  நடத்தப்படுகின்றன. இந்நிலையில் பாகிஸ்தானில் விளையாட மறுத்ததால் இந்தியாவின் கொடி வேண்டுமென்றே பாகிஸ்தான் மைதானத்தில் ஏற்றப்படவில்லையா என்ற விவாதம் தற்போது சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்,  “சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். கராச்சி, ராவல்பிண்டி மற்றும் லாகூர் மைதானங்களில் விளையாடவுள்ள நாடுகளின் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன.

இந்திய அணி அதன் போட்டிகளை துபாயில் விளையாடவுள்ளது. வங்கதேச அணி அதன் முதல் போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி துபாயில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் வந்தடையாததால் வங்கதேச அணியின் கொடி ஏற்றப்படவில்லை. பாகிஸ்தான் வந்தடைந்த அணிகளின் கொடிகள் மட்டுமே தற்போது ஏற்றப்பட்டுள்ளன.

Champions Trophy 2025: squads, groups and fixtures of all eight teams | Reuters

இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக விளக்கமளிக்க வேண்டும் என நினைக்கவில்லை. பாகிஸ்தானுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக பொய்யான செய்தியை பரப்பி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரத்துக்கு விளக்கமளிக்க அவசியமில்லை.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக பாகிஸ்தான் முழுவதும் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளில் இந்திய அணியின் கேப்டன் உட்பட அனைத்துக் கேப்டன்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இந்திய அணியை புறக்கணிக்கும் எந்த ஒரு எண்ணமும் எங்களுக்கு இல்லை” என தெரிவித்துள்ளது.  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement