“சிவராமன் மரணத்தில் எங்களுக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை” - சீமான்!
“பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட சிவராமன் மரணத்தில், எங்களுக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்
சீமான் கலந்து கொண்டார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,
கொல்கத்தாவில் நடைபெற்ற சம்பவம் கூட்டு வன்கொடுமை என்று அனைவருக்கும்
தெரிகிறது. ஆனால், ஒருவரை மட்டும் கைது செய்து வைத்துக் கொண்டு, இழுத்துக் கொண்டு போவது தான் வேடிக்கையாக இருக்கிறது. திட்டமிட்ட வன்புணர்வு. இது கொலை. கடுமையான வன்மம் இருந்திருக்க வேண்டும். கல்லூரியின் முதல்வர் இதை தற்கொலை என்று ஏன் சொல்கிறார்? அதற்கான அவசியம் என்ன?
இந்த நாட்டில் நடக்கிற 100 குற்றங்களில், 99 குற்றங்கள் போதையில் தான்
நடக்கின்றன. ஆம்ஸ்ட்ராங் கொலையிலும் போதையினால் மட்டுமே வெட்டி இருக்க
முடியும். எல்லோரும் இந்த செயலை கண்டித்து இருக்க வேண்டும். போராடுபவர்களை நீங்கள் போராட்டத்தை கைவிடுங்கள், நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறுகிறார்கள். நடவடிக்கை எடுங்கள் நாங்கள் கைவிடுகிறோம்.
அரசு மருத்துவருக்கே உரிய கழிவிடம் இல்லை. ஓய்வெடுக்கும் இடமில்லை. பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட சிவராமன்
மரணத்தில் எங்களுக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை. அவர் குற்றம்
செய்திருக்கிறார். குற்ற உணர்ச்சியில் தான் அவர் இறந்திருக்கிறார். இதற்கு முன்பாக கூட எங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார், “நான் சாகப் போகிறேன்” என்று. அதை எனது தம்பிகள் இடம் கொடுத்து அது என்ன என்று நான் விசாரிக்க சொன்னேன். அவரை காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்ததே நாம் தமிழர் கட்சி தம்பிகள் தான்.
மம்தா பானர்ஜி மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம். மம்தா பானர்ஜியிடம் தான் காவல்துறை இருக்கிறது. அவர் சிபிஐ விசாரணை கேட்பது ஏமாற்று வேலை. எங்களை ஏமாற்றுகிறீர்கள் என்று அர்த்தம். கொல்கத்தா பாலியல் வழக்கை பாஜக தான் வெளிக்கொண்டு வந்தது என்ற கேள்விக்கு? அதற்கு பாராட்டுகள்.
வினேஷ் போகத் தோற்கடிக்கப்பட்டது அவருக்கு அவமானம் அல்ல. நாம் தான் வெக்கி தலைகுனிந்து கண்ணீர் வடிக்க வேண்டும்” எனப் பேசினார்.