“பெரிய ஆளுமையை இழந்துள்ளோம்” - விஜயகாந்த் உடலுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் அஞ்சலி!
மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடலுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் அஞ்சலி செலுத்தினார்.
விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும், சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமையகம் நேற்று காலை அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து காலை 9:30 மணி அளவில் விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் திரைப்பட துறையில் கொடி கட்டி பறந்த நிலையில் அதன் பிறகு அரசியலில் காலூன்றி, அதிலும் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் வரை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2006-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. இதன் பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடலுக்கு திரைப் பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “என் ஊரில் உள்ள விஜயகாந்த் ரசிகர் மன்றத்தில் நானும் ஒரு உறுப்பினராக இருந்தேன். அவருடைய படம் தனக்கு மிகவும் பிடிக்கும். உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக அவர் இருந்துள்ளார். இளம் பருவத்தை நினைத்து பார்க்கும் போது நான் விஜயகாந்த் ரசிகனாக இருந்துள்ளேன்.
அவரது அரசியலும், தமிழக திரையுலகத்தில் அவருடைய சக்தியும் எனக்கு மிகவும் முக்கியமான விஷயமாக தெரிந்தது. அவருடைய இழப்பு எனக்கு மிகவும் பெரும் வலியை கொடுத்தது. தமிழ் திரையுலகத்தில் மட்டும் அல்லாமல் அரசியலிலும் பெரும் ஆளுமை. சாதிய வர்கம் மற்றும் மிகப்பெரிய ஆளுமைகளுக்கு எதிராக திமிராக நின்று சண்டை செய்தவர் விஜயகாந்த். அனைவரையும் சரிசமமாக பார்த்தவர். பெரிய ஆளுமையை இழந்துள்ளோம்.” இவ்வாறு தெரிவித்தார்.