"மீண்டும் மீண்டும் செய்யும் தவறுகள் குறித்து போதுமான அளவுக்கு ஆலோசித்துவிட்டோம்" - இலங்கை கேப்டன்!
மீண்டும் மீண்டும் செய்யும் தவறுகள் குறித்து போதுமான அளவுக்கு ஆலோசித்து விட்டதாக என இலங்கை கேப்டன் தெரிவித்துள்ளார்.
9வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதுவரை 38 லீக் போட்டிகள் நடைபெற்று உள்ளது. இந்நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரில் டி பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி 4 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் காரணமாக டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்தும் வெளியேறியது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரிலும் இலங்கை அணி மிகவும் சராசரியான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது.
இதையடுத்து, இலங்கை அணி மீண்டும் மீண்டும் செய்யும் தவறுகள் குறித்து விரிவாக ஆலோசித்துள்ளோம் எனவும், தவறுகளை திருத்திக் கொள்வதற்கான நேரம் இது என நம்புவதாகவும் அந்த அணியின் கேப்டன் வனிந்து ஹசரங்கா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது :
"ஒவ்வொரு தொடருக்குப் பிறகும் நாங்கள் எங்கு தவறு செய்கிறோம் என்பது குறித்து ஆலோசனை செய்கிறோம். ஆனால், எங்களது தவறுகளை இன்னும் நாங்கள் திருத்திக் கொள்ளவில்லை என நினைக்கிறேன். அதன் காரணமாக சீக்கிரமாகவே டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வெளியேறிவிட்டோம். அணியின் கேப்டனாக எனக்கு இந்த விஷயம் மிகவும் வருத்தமளிக்கிறது.
இதையும் படியுங்கள் : “வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளின் உரிமத்தை நீட்டிக்க வேண்டும்” – ஆம்னி உரிமையாளர்கள் கோரிக்கை!
இந்த உலகக் கோப்பையில் செய்துள்ள தவறுகளையும் ஆலோசித்துள்ளோம். தவறுகளை திருத்திக் கொள்வதற்கான நேரம் இது என நம்புகிறேன். அணியின் பேட்டிங் மிகுந்த கவலைக்குரிய விஷயமாக உள்ளது. பந்துவீச்சில் நன்றாக செயல்பட்டாலும், பேட்டிங்கில் சொதப்பி விடுகிறோம். அணியின் பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், சீக்கிரமே தொடரிலிருந்து வெளியேறி விட்டோம்"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.