ஒரு வாரத்திற்கு முன்னதாக எச்சரிக்கை விடுத்ததாக கூறிய அமித்ஷா! குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த பினராயி விஜயன்!
கேரளாவில் ஏற்பட்ட பேரிடர் குறித்து ஒரு வாரத்திற்கு முன்னதாகவே மத்திய அரசு முன்னெச்சரிக்கை விடுத்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இதில் தற்போது வரை 219 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், உயிரிழப்புகள் அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 1000-த்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் டெல்லியில் இன்று (ஜுலை 31) நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரளாவில் ஏற்பட்ட பேரிடர் குறித்து ஒரு வாரத்திற்கு முன்னதாகவே மத்திய அரசு முன்னெச்சரிக்கை விடுத்ததாக தெரிவித்திருந்தார். முன்னெச்சரிக்கை விடுத்திருந்தும் கேரள அரசு இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து பினராயி விஜயன் கூறுகையில், "இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்த அளவை விட அதிகன மழை பெய்தது. அதுமட்டுமில்லாமல், பேரிடர் பாதிப்பு ஏற்பட்ட பின்பே, காலை 6 மணி அளவில் முன்னெச்சரிக்கை தகவல் தெரிவிக்கப்பட்டது" என தெரிவித்தார்.