நியூசிலாந்து உடனான தோல்விக்கு விளக்கமளித்த இந்திய மகளிர் அணி கேப்டன் #HarmanpreetKaur !
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து உடனான போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் விளக்கம் அளித்துள்ளார்.
9வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏ பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், இந்த தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன. இதில் , டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் சோபி டெவின் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்கம் முதல் நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடியது. நியூசிலாந்து அணி தரப்பில் சூசி பேட்ஸ் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் .
தொடர்ந்து ஜார்ஜியா 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் . பின்னர் சிறப்பாக விளையாடிய சோபி டெவின் அரைசதமடித்தார் . இறுதியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 161 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி 19 ஓவர்களில் 102 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், நியூசிலாந்து அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தத் தோல்வி குறித்து இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் பேசியதாவது,
"இந்த போட்டியில் நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை. அரையிறுதி சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் இனி அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டும். நாங்கள் விக்கெட்டுகளை எடுக்க வாய்ப்புகளை ஏற்படுத்தினோம். ஆனால் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இதற்கு காரணம் நியூசிலாந்து அணி எங்களை விட சிறப்பாக விளையாடினார்கள்.
அதில் எந்த சந்தேகமும் இல்லை. பீல்டிங்கில் நாங்கள் சில தவறுகளை செய்து விட்டோம். 160 ரன்கள் என்ற இலக்கை நாங்கள் பலமுறை வெற்றிகரமாக கடந்திருக்கிறோம். எனவே இந்த ஆட்டத்திலும் நாங்கள் அதை வெற்றிகரமாக எட்டுவோம் என்று தான் நினைத்தேன். இந்த கட்டத்தில் இருந்து நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டிய சூழலில் இருக்கின்றோம். இந்த உலகக் கோப்பை தொடரில் இது நாங்கள் எதிர்பார்க்காத ஒரு தொடக்கமாக அமைந்திருக்கிறது."
இவ்வாறு இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்தார்.