”கல்வி எனும் ஆயுதத்தை வைத்து உலகையே வெல்லலாம்”- அகரம் விழாவில் கமலஹாசன் பேச்சு!
நடிகர் சூர்யா அகரம் என்னும் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை மூலம் சூர்யா, படிக்க வசதியற்ற மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகிறார். இந்த நிலையில் அகரம் அறக்கட்டளையின் 15 ஆண்டுவிழா சென்னையில் நடந்தது. அதில் நடிகரும், ராஜ்யசபா எம்பியுமான கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது பேசிய கமலஹாசன்,
”கல்வியும், அன்பும் ஒன்றாக கிடைப்பது இல்லை. அது அம்மாவிடம் கிடைக்கும். அகரம் பவுண்டேசனில் கிடைக்கும். சமூக வானில் இப்படி நல்லது செய்தால் முள்கீரிடம்தான் கிடைக்கும். கல்வியை மற்றவர்கள் கற்றுக்கொள்ள ஆவண செய்வேன் என்று செயல்படுவது பெரிய விஷயம். இங்கே பலன் பெற்று டாக்டர் ஆன பலரை காண்பித்தார்கள். இனி அப்படி காட்ட முடியுமா என்று தெரியவி்ல்லை. காரணம், 2017க்கும்பின் அந்த முயற்சியில் தடைகள். அதனால்தான் நீட் வேணாம் என்று சொல்கிறோம். 2017ல் இருந்து வாய்ப்பு குறைந்தது. அனைத்து பிள்ளைக்களுக்கும் மருத்துவம் கிடைக்காதபடி சட்டம் செய்துவிட்டது.அதை மாற்றி எழுதக்கூடியது கல்விதான். இந்த போரில் ஆயுதம் இன்றி நாட்டையே செதுக்கி தள்ள வல்லமை படைத்தது.
சர்வதிகார, சனாதன சங்கிலிகளை நொறுக்கி தள்ளிக்கூடிய ஒரே ஆயுதம் கல்விதான். நின்று ஆண்டு கொண்டு இருப்பது தலைமை அல்ல, சமூகத்துடன் கரைந்து போக வேண்டும். அடுத்த தலைமுறையில் மற்றவர்கள் பெயரை சொல்ல வேண்டும். எனக்கு அது புரிய 70 ஆண்டுகள் ஆச்சு. சூர்யாவின் பணியை நேற்று கூட முதல்வரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். என்ஜிஓக்களுக்கு உதவ வேண்டும். அவர்கள் அரசிடம் பண உதவி கேட்கவில்லை அனுமதி கேட்கிறார்கள் என்றேன். நாங்க ஆவண பண்ணிக்கொண்டு இருக்கிறோம் என்றார். திட்டங்கள் சூர்யாவை பார்த்து வந்தால், அரசுக்கு அவமானமல்ல, நல்ல விஷயங்களை எதிரியிடம் இருந்து கூட எடுக்கலாம். சூர்யா நம்ம பிள்ளை. அரசு ஒரு பெரிய திட்டத்தை அறிவித்து இருக்கிறது.அதில் எனக்கும், உங்களுக்கும் பங்கு உண்டு. நீட் கூட அரசியல் அல்ல, கல்வி சம்பந்தப்பட்டதுதான்.
கமல்ஹாசன் மன்றம் நற்பணி இயக்கமாக மாறியது. நடிகர் சிவகுமார் அண்ணன்தான் அப்படி மாற்ற வைத்தார். நான் பெரிய நடிகராக மாறும்போது, அவர் எனக்காக இடம் கொடுத்தவர். நிஜமாகவே எங்களுக்குள் அண்ணன், தம்பி உறவு வலுக்க ஆரம்பித்தது. ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக ஆரம்பித்தேன். அதற்கு விதை அண்ணன் சிவகுமார்.அவருக்கு பலர் முன்னோடிகள்.
டீசர், டிரைலர் ஆடியோ வெளியீட்டுவிழாவில் கிடைக்காத சந்தோசம், அந்த விழாக்களில் கிடைக்காத சந்தோஷம் இதில் கிடைக்கிறது. பல மக்களை சந்தோசப்படுத்தவது கலைத்துறை, அது வியாபாரத்துறை. அதுதான் சோறு போடுகிறது. அதுதான் நற்பணி இயக்கத்தை நடத்துகிறது. என்னிடம் பாட்டு, பைட், வெளிநாட்டில் பாட்டு இருக்கிறதா என்று அவர்கள் கேட்பார்கள். இங்கே அகரம் பேசுவது,நல்ல செயல்கள், அன்பு, கல்வி. இந்த ஆயுதத்தை வைத்து உலகை வெல்லலாம்"
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.