வாரணாசியில் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் - நியூஸ்7 தமிழுக்கு ஆட்சியர் ராஜலிங்கம் பிரத்யேக பேட்டி!
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜலிங்கம் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 6 கட்ட வாக்குப் பதிவுகள் முடிவடைந்துள்ள நிலையில், நாளை ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையடுத்து ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்நிலையில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியின் தேர்தல் அதிகாரியும், அந்த மாவட்டத்தின் ஆட்சியரும், தமிழருமான ராஜலிங்கம் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.
இது தொடர்பாக நமது செய்தியாளர் வசந்திக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
“தேர்தல் நேரத்தில் சவாலாக இருப்பது இந்த வெயில். இந்த வெயிலில் வாக்களர்களை வாக்குச்சாவடி மையத்திற்கு கொண்டுவருவது என்பது சவாலான ஒரு விஷயம். அதற்கான விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறோம். வாக்குச் சாவடி மையத்தில் மக்களுக்கு தேவையான தண்ணீர், மருத்துவ வசதி போன்றவற்றை செய்து வருகிறோம்.
எனக்கு முன்பும் இங்கு தமிழர்கள் மாவட்ட ஆட்சியர்களாக இருந்துள்ளனர்.
பிரதமர் மோடியின் தொகுதி என்பதால் அதிக கவனத்தை பெற்றுள்ளது. சிறு தவறுகள் கூட நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. தேர்தல் நேரம் மட்டுமின்றி அனைத்து நேரங்களிலும் இங்கு கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு வருகிறோம். பல கலாச்சாரங்களை சேர்ந்த மக்கள் இங்கு வருகின்றனர். அளவுக்கு அதிகமான பக்தர்களை எதிர்கொள்வதும் பெரும் சவாலாக அமைகிறது. வாரணாசியில் பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசல் என்பது மக்களின் வருகை அதிகமாக இருப்பதால் ஏற்படுகிறது” என தெரிவித்துள்ளார்.